×

“மிக்ஜாம்” புயலை எதிர்கொள்வது குறித்து சென்னை விமான நிலையத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம்: அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்பு

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் “மிக்ஜாம்” புயலை எதிர்கொள்வது குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை விமான நிலையத்தில் “மிக்ஜாம்” புயல் தாக்கத்தை எதிர்கொள்வது குறித்து, விமான நிலைய இயக்குநர் சி.வி.தீபக் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நேற்று முன்தினம் இரவு நடந்தது. மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் வரை, விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில், ஓடுபாதை பகுதியில் நீர் தேங்காதபடி வெளியேற்றிக் கொண்டே இருக்க வேண்டும். நிக்ஜாம் புயல் சென்னையை தாக்குவதற்கு முன்பாகவே நிறுவனங்கள் தங்கள் விமானங்களை பெங்களூர், ஐதராபாத், திருச்சி, கோவை, மதுரை போன்ற விமான நிலையங்களுக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிக்கப் வாகனங்கள், பயணிகளை அழைத்துச் செல்லும் வாகனங்கள், லேடர் ஏணிகள் உட்பட எந்த ஒரு வாகனமும் ஓடுபாதை பகுதியில் இயக்குவதற்கு அனுமதி கிடையாது. பயணிகள், விமான நிலைய ஊழியர்கள், விமான நிறுவன ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் உணவு, குடிநீர் வசதிகளை முன்னதாகவே செய்து வைத்துக் கொள்ளவும், மின் தடை ஏற்பட்டால் அவசரத் தேவையான ஜெனரேட்டர்கள், இன்வெர்ட்டர்கள் போன்றவைகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப் படுகிறது.

பின்பகுதியில் ஓடும் அடையாறு ஆற்றின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ல் பெருமழையின் போது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், சென்னை விமான நிலைய ஓடுபாதைகளில் வெள்ளம் புகுந்து 5 நாட்கள் மூடப்பட்டிருந்தது. அதேபோன்ற நிலை ஏற்பட்டு 2019ல் 2 நாட்கள் விமான நிலையம் மூடப்பட்டது. இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாமல் இருக்கவே அடையாறு ஆற்றின் நீரோட்டத்தை தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்துள்ளனர். தற்போது அடையாறு ஆறு முழுமையாக தூர்வாரி, ஆழப்படுத்தப்பட்டு, கரைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளதால் பாதிப்பு வராது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். பயணிகள் இன்றும், நாளையும் விமான நிறுவனங்களிடம் சேவைகள் குறித்து உறுதிப்படுத்திய பின்பு வந்தால் போதும். குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே வந்தால் விமானங்கள் தாமதம் இன்றி புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post “மிக்ஜாம்” புயலை எதிர்கொள்வது குறித்து சென்னை விமான நிலையத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம்: அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Airport ,Cyclone ,Meenambakkam ,Miqjam ,Chennai… ,
× RELATED சென்னை விமானநிலையத்தில் நடப்பு...